Friday, August 2, 2013

Vaazhkai Payanam

ரொம்ப வருடங்களுக்கு முன்னால் எழுதிப் பார்த்த ஒரு சிறுகதை இது. வளவளவென்று “ஓவராக” இருந்த முடிவைக் கொஞ்சம் சுருக்கி ஆங்காங்கே வர்ணனைகளை மாற்றியிருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று கருத்துச் சொன்னால் தன்யனாவேன்.

ஆங்! அப்புறம், வழக்கமான முன் குறிப்பு – என்னுடைய சொந்தக் கதை இல்லீங்கோவ்!  (வழக்கமான கேள்வியோட வந்திருவாங்களே கமெண்ட் போட, அவங்களுக்காக‌!)

-o0o-

The Final Voyage

வீட்டிலே காரில் ஏறியதிலிருந்தே சித்ரா கார்த்திக்கிடம் அதிகம் பேசவில்லை. கிண்டி ராஜ்பவன் தாண்டிய பிறகு தூரத்தில் “அண்ணா பல்கலைக்கழகம்” என்பதைப் பார்த்த பிறகு தான் அவ‌ன் பக்கம் திரும்பி, “நான் உங்க காலேஜுக்கு வர்றது இது தாங்க மொதல் தடவை. வருஷா வருஷம் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிஸல்ட்டு வரும்போது டிவியில பார்த்ததோட சரி.” என்றாள்.

“கவுன்சலிங்-க்கு எல்லாம் வரலையா நீ?”

“ஹை!! கவுன்சலிங்-கா? பொறியியல் படிப்பெல்லாம் நெனச்சுப் பாக்குற அளவுக்கு எனக்குப் படிப்பு வரல சாமி. ஏதோ என்னால முடிஞ்சதெல்லாம் எங்க சிற்றூர் அரசு மகளிர் கல்லூரியில பி.ஏ. படிப்புத்தான். அதுவுங்கூட உங்களை மாதிரி ‘மினிமம் டிகிரி படிச்ச பொண்ணு தான் வேணும்’-னு அடம்பிடிக்கிற மாப்பிள்ளை கோஷ்டிக்காகத்தான்.” என்று சொன்னவள், அவனது இடுப்பில் குத்தி, கண்களில் லேசாகக் கோபம் காட்டி, “எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே கேக்க வேண்டியது.. நான் உங்க அளவுக்குப் படிக்கலைன்னு என்னை மட்டம் தட்டுறதுக்கு.. அப்படித்தானே?” என்றாள்.

கார்த்திக் மெலிதாகப் புன்னகைத்தானே தவிர‌ பதிலொன்றும் சொல்லவில்லை. கல்யாணமான இந்த ஆறு மாதங்களில், இவள் இப்படிக் காட்டுவதெல்லாம் பொய்க்கோபம், இப்படிச் சண்டை போடுவதெல்லாம் ஊடல் என்று அவனுக்குப் புரிய ஆரம்பித்திருந்தது.

காரை வளைத்துத் திருப்பிக் கல்லூரிக்குள் நுழைந்த போது அவள் கேட்டாள்: “இன்னிக்கு அவங்க வருவாங்க தானே?”

திரும்பி அவளது கண்களைப் பார்க்க முயன்று தோற்றுத் தலைகுனிந்து, “தெரியலை” என்றான் கார்த்திக்.

“நான் அவங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கேன். அவங்க வந்திருக்கணும்னு குலதெய்வத்தை வேண்டிக்கோங்க.”

‘அவங்க’, ‘அவங்க’ என்று சித்ரா குறிப்பிடுவது குறிப்பிடுவது அபிராமியைப் பற்றி. கார்த்திக்கின் வகுப்பில் அவனோடு படித்த அபிராமி. அவ‌ன் காதலித்த அபிராமி. ஆனால் அவ‌ன் காதலித்ததை அறியாத அபிராமி.

கார்த்திக் மேலே எதுவும் பேசாமல் இடம் பார்த்துக் காரை நிறுத்துவதில் மும்முரமானான். நிறைய கார்கள் அங்கங்கே நின்றிருந்தன. அவர்கள் வந்திருப்பது கார்த்திக் பேட்ச்சின் எட்டாம் ஆண்டு ரீயுனியன் நிகழ்ச்சிக்கு. எட்டு ஆண்டுகள் கழித்து இப்போது தான் மறுபடி தன்னோடு வகுப்பில் படித்த அநேகம் பேரைப் பார்க்கப் போகிறான். அபிராமியையும் தான். அவளுக்குத் திருமணமாகி விட்டதும், ஒரு குழந்தை இருப்பதும், ஹைதராபாத்தில் வசிப்பதுமான விபரங்ககளை, அவர்களின் வகுப்பிற்கான‌ மின்மடற்குழுமத்தின் உபயமாகவும், அண்மையில் அனைவரும் “வந்து பழக” ஆரம்பித்திருக்கும் ஃபேஸ்புக் வாயிலாகவும் அறிந்திருந்தான்.

அபிராமி பற்றி சித்ராவிடம் அவன் சொன்னது ஒரு பொன்மாலைப் பொழுதில் இருவரும் கடற்கரையில் அலைகளில் மனம் நனைத்துப் பின் காலாற நடந்து களைத்து அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தான். ‘சொல்லலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்தோடு கொஞ்ச நேரம் போராடிவிட்டு, ‘கணவன் மனைவிக்குள்ளே ஒளிவுமறைவில்லாத ஒரு ஆரோக்கியமான உறவு வேண்டும்’ என்ற ஒப்பற்ற‌ கொள்கையின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி விட்டான். (முதல் ஆண்டின் முதல் மாதம் கொஞ்சம் லேட்டாய் அவள் கல்லூரியில் சேர்ந்தது / புதிய மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில் அவள் நடனமாடியது, அதை அவன் பார்த்துக் கொண்டிருந்தது / கல்ச்சுரல்ஸ் நேரத்தில் அவளோடு சேர்ந்து வாலண்ட்டியராய் பணியாற்றியது / இன்ன பிறவெல்லாம் “மாண்டேஜ்” காட்சிகளாய்க் கற்பனை செய்து கொள்க.)

ரொம்ப சுவாரஸ்யமாகக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதை போலக் கேட்டாள் அவள்.

“அய்யய்யே! என்னங்க இது? நீங்க அவங்களைக் காதலிச்ச விஷயத்தைக் கடைசி வரைக்கும் அவங்க கிட்டே சொல்லவே இல்லையா? இதென்ன கூத்து? தினத்தந்தி கன்னித்தீவு கதையை முடிவு சொல்லாம பாதியில நிறுத்தின மாதிரி?!!” என்று கடைசியில் கேட்டாள்.

அவன் ஏன் சொல்லவில்லை அபிராமியிடம்? எட்டு வருடங்களாகியும் இன்னும் அவனுக்கே சரியான பதில் தெரியாத கேள்வி அது. அவனது காதல் அவளுக்குப் பிடிக்குமா என்ற தயக்கம் ஒரு புறம். ‘ச்சீ! இவ்வளவு தானா நீ?’ என்று சீறி விடுவாளோ என்ற பயம் ஒருபுறம். அவளைக் காதலிக்கவும் கல்யாணம் செய்துகொள்ளவும் தன‌க்குண்டான தகுதிகள் பற்றிய கவலை ஒரு புறம். அவ‌ன் வீட்டில் சம்மதிப்பார்களா என்ற சந்தேகம் ஒரு புறம். (இந்தக் கதையைக் குறும்படமாக எடுத்தால் அவனது அப்பாவைக் கையில் அரிவாளோடு, முகத்தில் கோபாவேசத்தோடு ஒரு ஷாட் இங்கே.) இப்படி நிறைய இருந்தன.

காரிலிருந்து இறங்கிய சித்ரா, சுற்றி வந்து அவ‌ன் கையோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டு “போலாமா?” என்றாள். இருவரும் நடந்தார்கள்.

தூரத்தில் தெரிந்த ஒரு கட்டிடத்தை அவளுக்குக் காட்டி, “அது தான் எங்க காலேஜ் கேண்ட்டீன்” என்றான்.

“ஓஹோ! அங்க உக்காந்து சாப்பிட்டுக்கிட்டே தான் அவங்களை சைட்டடிக்கறதா?”

‘ஏண்டா சொன்னோம் இவளிடம்’ என்ற நினைப்பும் அலுப்பும் ஒருகணம் அவன் முகத்தில் தோன்றி மறைந்தன. அதைச் சட்டென்று கவனித்து விட்ட‌ சித்ரா,
“ஏண்டா இவகிட்டே சொன்னோம்-னு நெனக்கிறீங்க இல்லையா? எனக்குத் தெரியும்.!!” என்றாள்.

அவனால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. சித்ரா அவ‌ன் கையை அழுத்தி, ”சிரிப்பெல்லாம் இருக்கட்டும் தம்பி. கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.” என்றாள்.

“வேற க்ளாஸ் பொண்ணாயிருந்தா கேண்ட்டீன்ல சைட்டடிக்கலாம். அவளை நான் சைட்டடிச்சதெல்லாம் எங்க‌ க்ளாஸ்லயே தான்.”

“ஓ! இது நல்ல பாயிண்ட்!!”

“அதோ தெரியுதே, அது எங்க ஸ்போர்ட்ஸ் கிரவுண்டு.”

“நீங்க இருக்கிற சைஸ்-க்கு அந்தப் பக்கமெல்லாம் தலை வச்சுக் கூடப் படுத்திருக்க மாட்டீங்களே.”

“ஏய்! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. கிரிக்கெட் மாட்ச் எப்போ நடந்தாலும் அங்கே தமிழ்-ல‌ கமெண்டரி குடுக்கிறது நான் தான் தெரியுமா?”

“அதானே பாத்தேன். விளையாட, கிளையாட போயிட்டீங்களோ-ன்னு பயந்துட்டேன்.”

“அடிப்பாவி..” என்று அவளது தலையில் செல்லமாய் அடிக்கக் கை ஓங்கியபோது எதிரில் ஜென்னியைக் கவனித்தான் கார்த்திக். பக்கத்தில் அவளது கணவர் விக்டர்.

ஜென்னி அவனது பெஸ்ட் ஃப்ரெண்ட். அவன் வகுப்பில் அவனோடு தான் படித்தாள். அபிராமி மேல் அவனுக்கிருந்த‌ காதலை அறிந்த ஒரே ஜீவன். அடிக்கடி அவ‌ன் சட்டைக் காலரைப் பிடித்து, “காதலிக்கிறதுன்னா என்னையும் விக்டரையும் மாதிரி இருக்கணும்டா. சின்ன வயசில இருந்து மனசுக்குப் பிடிச்சு, வளர்ந்த பிறகு ஒருத்தர் கிட்டே ஒருத்தர் சொல்லி, வீட்டில சொல்லிப் போராடி சம்மதம் வாங்கி, இன்னைக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறோமே இதுக்குப் பேர் தாண்டா காதல். நீயெல்லாம் காதலிச்சதா சொல்லிக்கிட்டு என் கண்ணு முன்னால வந்து நிக்காதே.” என்று லெக்சர் கொடுப்பது அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று.

விக்டரோடு கைகுலுக்கிப் பேசிக் கொண்டிருந்தாலும் கார்த்திக்கின் கவனமெல்லாம் சித்ரா என்ன செய்கிறாள் என்பதிலேயே இருந்தது. அவள் ஜென்னியின் கையைப் பிடித்து, ரகசியமான குரலில், “நான் அவங்களைப் பார்க்கத்தாங்க வந்திருக்கேன்.” என்றாள்.

“யாரு அவங்க?” என்று சற்று நேரம் குழம்பிய ஜென்னி, கார்த்திக்கின் முகத்திலிருந்த அசடு வழியும் முழியைப் பார்த்துக் கண்டுபிடித்து, ஆச்சர்யப்பட்டு,
“எல்லா விஷயமும் சொல்லிட்டியாடா இவகிட்டே?” என்றாள்.

அவ‌ன் தலையசைத்ததும், “சரியான‌ நீரா ராடியா மண்டையன்டா நீ” என்று கவுண்டமணி வாய்ஸில் வாழ்த்துச் சொல்லிவிட்டு, சித்ராவிடம் திரும்பி, “வந்திருக்கிறா. குழந்தையோட. உள்ள உக்காந்திருக்கிறா.” என்றாள்.

சித்ரா கொஞ்சம் பரபரப்புடன், “போலாமே.” என்று அவசரப்படுத்தினாள்.

ஜென்னி அவனது தோளில் தட்டி, “மவனே நல்லா மாட்னடா நீ இன்னிக்கு.” என்று வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.

-o0o-

விவேகானந்தா ஆடிட்டோரியம், அவர்கள் படித்த‌ காலத்தில் (சரி, கல்லூரிக்குள் திரிந்து கொண்டிருந்த காலத்தில்) எப்படி இருந்ததோ அதிலிருந்து அதிக மாற்றங்களின்றி அப்படியே இருந்தது. தூரத்தில் உட்கார்ந்திருந்தாலும் உள்ளே நுழைந்ததுமே கார்த்திக்கின் கண்களுக்குப் பளிச்சென்று தெரிந்தாள் அபிராமி. நான்கு வருடங்களாய் இப்படியெல்லாம் திருட்டுத்தனமாய்ப் பார்த்துப் பழகிய கண்களாயிற்றே..!! எதற்கோ திரும்பிய அவளும் அவனைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு, திமிறும் தன் குழந்தையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் அவர்களை நோக்கிக் கையசைத்தாள். கொஞ்சம் குண்டாகியிருந்தாள். (இங்க மட்டும் என்ன வாழுதாம்!) அதுவும் கூட அழகாய்த்தானிருந்தது அவளுக்கு.

சித்ரா அவ‌ன் காதருகே கிசுகிசுப்பாய், “அவங்க தானே? நிஜமாவே நீங்க சொன்ன மாதிரி ரொம்ப அழகாத்தான் இருக்காங்க..” என்றாள்.

“சரி சரி. அங்க வந்து ஜாக்கிரதையாப் பேசு. எதுவும் உளறக் கூடாது.” என்று எச்சரித்து விட்டு அவளது கையைப் பிடித்துக் கொண்டு அபிராமியிடம் நடந்தான் கார்த்திக்.

பக்கத்தில் போனதும், “வாடா.! எப்படி இருக்கே? எவ்ளோ நாளாச்சு பார்த்து!! உக்கார்..” என்றாள் அபிராமி. லேசான குறுகுறுப்புடன் சித்ராவைப் பார்த்தாள்.

“ஹாய் அபி. இவ என் மனைவி சித்ரா.”

அபிராமி, ரொம்ப சிநேகத்துடன் சித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு,
“ஹலோ. எப்படி இருக்கீங்க?” என்றாள்.

“நான் நல்லா இருக்கேங்க.” என்ற சித்ரா, அபிராமியின் குழந்தையின் கன்னத்தைத் தடவி, “பொண்ணு பேர் என்ன?” என்றாள்.

“ஆர்த்தி. ஒரு வயசாகப் போகுது அடுத்த மாசம்.” என்று சொன்ன அபிராமியின் குரலில் மிகுந்த பெருமையும் பூரிப்பும்.

சித்ரா கைநீட்டியதும் ஆர்த்தி அவளிடம் தாவினாள். குழந்தையை சந்தோஷமாகப் பிடித்தபடி கார்த்திக்கைப் பார்த்தாள் சித்ரா. அவ‌ன் குழந்தையின் விரலைப் பிடிக்க முயன்றான். அவனது கைக்குள் சிக்கவில்லை. குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தது. ஆர்த்திக்கு அப்படியே அபிராமியின் கண்கள். அவனால் பார்க்க முடியாமல் தலைகுனிந்து கொண்டான்.

அபிராமி சித்ராவிடம், “என்னால உங்க கல்யாணத்துக்குத்தான் வர முடியல. ரொம்ப ஸாரி. அப்ப நாங்க‌ நியூ ஜெர்ஸியில இருந்தோம்.” என்றாள்.

“பரவாயில்லைங்க. அதனால என்ன?”

“ஆனா ஒரு விதத்தில என் கல்யாணத்துக்கு இவன் வராம இருந்ததுக்கு பழிக்குப் பழி வாங்கினேன்-னு வச்சுக்கலாம்.” என்றவள், அவனிடம் திரும்பி, “ஏண்டா வரலை நீ? இங்கே தானே இருந்தே?” என்றாள்.

அவன் பதில் சொல்லாமல் தடுமாறுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

“இல்லை அபி.. நான்..”

“நீ பேசாதேடா. இவங்க சொல்லட்டும். என்னைப் பத்தி உங்க கிட்டே ஏதாவது சொல்லியிருக்கானா இவன்? சொல்லியிருக்க மாட்டானே. ஃப்ரெண்டுன்னா இவன் கண்ணுக்கு ஜென்னி மட்டும் தான் தெரிவா. நாங்க யாரும் தெரிய மாட்டோம். அப்படித்தானே? என்னைப் பத்தியெல்லாம் சொல்லியிருக்க மாட்டானே..?”

சித்ரா அவனைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகை வீசி பயமுறுத்தி விட்டு,
“அப்படியெல்லாம் இல்லைங்க. காலேஜ் பத்திப் பேசும் போது உங்களைப் பத்தியும் சொல்லியிருக்காரு.” என்று சொல்லி ஏர்டெல்லிலிருந்து வோடஃபோனுக்கு மாறிய போதும் நம்பரை அப்படியே தக்க வைத்துக் கொண்ட கஸ்டமர் போல‌ அவ‌ன் வயிற்றில் பாலும் தேனும் வார்த்தாள்.

இவ்வகைப் பேச்சுக்கள் ஆபத்தான திசையில் போகும் பயணத்துக்கான ஆரம்பம் என்ற கவலையுடன் அவன் பேச்சை மாற்ற முயன்றான்.

“அதை விடு அபி. உன் வேலையெல்லாம் எப்படி இருக்கு?”

“நல்லாப் போகுதுடா. இப்போ நான் ப்ராஜெக்ட் மானேஜர், தெரியுமில்ல?”

“ம், தெரியும். ரகு சொன்னான்.”

“ஆமாடா. ஆனா நெறய வேலைடா. ஒரு வயசுக் குழந்தைய‌ வச்சுக்கிட்டு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ப்ச்! நாம காலேஜ் படிச்ச காலத்தில எப்படியெல்லாம் திரிஞ்சோம்?! இவங்க கிட்டே சொன்னியா? காலேஜ்ல நாங்க பெரிய கும்பல். இவன், ரகு, ஜென்னி, அமர்நாத், நான், ப்ரியா எல்லோரும். எப்படியெல்லாமோ கூத்தடிச்சோம். தட் வாஸ் எ கிரேட் டைம்..” என்று மலரும் நினைவுகளில் சற்றே மூழ்கினாள்.

சித்ரா, ஆர்த்தியின் கன்னத்தில் முத்தமிட்டு, “ஆர்த்தியோட அப்பாவைக் கூட்டிட்டு வரலையா நீங்க?” என்றாள்.

“இல்லை. அவருக்குக் கொஞ்சம் வேலை இருந்ததால வர முடியலை. நான் இவங்களையெல்லாம் பாக்கலாமேன்னு வந்தேன்.” என்றவள், அவனைப் பார்த்து,
“காலேஜ் விட்டுப் போயும் மாறவே இல்லைடா நீ. எப்பவும் போல அமைதியா உக்காந்துகிட்டு..!!” என்றாள்.

அவன் ஒரு மாதிரி மையமாகப் புன்னகைத்து வைத்தான்.

அபிராமி, சித்ராவின் கையைப் பிடித்து, “உங்களுக்குத் தெரியுமா? எங்க கும்பல்லயே ரொம்ப அமைதியானவன், ரொம்ப நல்லவன் இவன் தான். நீங்க ரொம்ப லக்கி..” என்றாள்.

சித்ரா கொஞ்ச நேரம் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அவனையும் அபிராமியையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, ஆர்த்தியை அவளிடம் திருப்பிக் கொடுத்தபடி, “ஆமாங்க. நான் ரொம்ப லக்கி தான்.” என்றாள்.

-o0o-

மேடையில் அவர்களுக்கு வகுப்பெடுத்துப் படிப்பறிவித்த‌ பேராசிரியர் ஒருவர் அவர்களின் வகுப்பைப் பற்றிய சில நகைச்சுவைச் சம்பவங்களை நினைவு கூர்ந்து கொண்டிருந்தார். அனைவரும் சாப்பிட்டபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஜென்னி கார்த்திக்கின் அருகில் வந்து, அவன் காலரைப் பிடித்து இழுத்து, “டேய்! என் கூட வா.” என்று அழைத்தாள். அவன் போனான். ஒரு ஓரத்தில் நின்று அவள் திரும்பி அபிராமியைப் பார்த்தாள். அவளைப் பின் தொடர்ந்து அவ‌னது பார்வையும் அந்தப் பக்கம் போனது. “என்னடா? எட்டு வருஷம் கழிச்சு இன்னிக்குத் தான் அவளை மறுபடி பார்த்தியா?” என்றாள்.

“ஆமா ஜென்னி.”

“என்ன தோணுது? ‘அச்சச்சோ! மிஸ் பண்ணிட்டோமே’-ன்னு தோணுதா?”

அவ‌ன் பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றான்.

“உன்னைத் தான்டா கேக்குறேன். தோணுதா?”

“அப்படியெல்லாம்.. ஒண்ணுமில்லை ஜென்னி.”

“அப்படியெல்லாம் ஏதாவது தோணினாலும், அதையெல்லாம் குழி தோண்டிப் பொதைச்சுட்டு ஒழுங்கா உன் மனைவியோட வாழுற வழியைப் பாரு. புரியுதா?”

“……..”

“புரியுதாடா?”

“சரி ஜென்னி. எனக்குத் தெரியும். இந்த வயசுக்கு மேல நீ அட்வைஸ் குடுக்குற மாதிரியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன்.”

“ஆனா ஒண்ணு மட்டும் எனக்குப் புரியலைடா. அபி கிட்டே சொல்றதுக்கு தைரியம் வராத உனக்கு இதையெல்லாம் மனைவி கிட்டே சொல்ற தைரியம் மட்டும் எப்படி வந்தது? பொண்டாட்டின்னு ஒருத்தி வந்து சிக்கிட்டா அவ்வளவு இளக்காரம்!?”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை, சொல்லிடலாம்னு தோணிச்சு..”

“ஏதோ, சந்தோஷமா வாழ்ந்தா சரிதான். வா, போகலாம். ”

-o0o-

காமராஜ் சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. மெரீனாவில் கூட்டம் அதிகமிருக்கவில்லை. காற்றில் ஆடும் தன் கூந்தலை அடிக்கடி சரி செய்தபடி சுவாரஸ்யமாக அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

“கொஞ்ச நேரம் கடற்கரையில உட்கார்ந்துட்டுப் போலாமா?” என்று அவ‌ன் கேட்டதும் உற்சாகமாய்ச் சம்மதித்தாள். காரை நிறுத்திவிட்டு மணலில் கால்கள் புதைய நடந்து காலியான ஒரு இடத்தில் இருவரும் அருகருகே அமர்ந்தார்கள்.

அவ‌ன் தோள் மீது சாய்ந்து கொண்டு, “அதென்ன? அவங்களை ரொம்பச் செல்லமா ‘அபி’ன்னு கூப்பிடுறீங்க?” என்றாள்.

“அது.. வந்து.. செல்லமா.. செல்லமா ஒண்ணும் கெடையாதே.. அவளே அப்படித்தான் எங்களைக் கூப்பிடச் சொல்லுவா. எல்லோரும் அப்படித்தான் கூப்பிடுவோம்.. செல்லமாவெல்லாம் எதுவும் இல்லையே..” என்று அவ‌ன் சொன்ன பதிலில் ஏகப்பட்ட தடுமாற்றம்.

சித்ரா சிரித்து, அவ‌ன் தலை முடியைக் கலைத்து, “இப்போ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க? நான் சும்மா கிண்டலுக்குக் கேட்டேன்.” என்றாள்.

அவ‌ன் அவளது கையைப் பிடித்து, “உனக்கு என் மேல கோபமே இல்லையா?” என்றான்.

“எதுக்கு கோபம்?”

“நான்.. நான் அவளைக் காதலிச்சது பத்தி..”

“அதான் நீங்களே ‘காதலிச்சது’-ன்னு இறந்த காலத்தில சொல்லிட்டீங்களே. அப்புறம் அது பத்தி நான் ஏன் கோபப்படணும்?”

“அதுக்கில்லை சித்ரா. என்ன தான் இறந்த காலமா இருந்தாலும்..”

கடலைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள் சித்ரா. மணலில் கைவைத்து அளைந்தபடி, “நீங்க கோபப்படலைன்னா ஒண்ணு சொல்லட்டுமா? அவங்க உங்களை இம்ப்ரஸ் பண்ணினப்போ உங்களுக்கு என்ன ஒரு இருபது வயசு இருக்குமா?”

 ”பதினெட்டு” என்று முணுமுணுத்தான் அவன்.

“அந்த வயசு இருக்கே, விளக்குக் கம்பத்துக்கு சுடிதார் போட்டு கண்ணு முன்னால நிக்க வச்சா கூட‌ மனசு இம்ப்ரஸ் ஆகிற வயசு. அதுக்குப் போய் உங்க மேல கோபப்படலாமா? கேக்கும் போதே லூஸுத்தனமா இல்ல?”

‘ஙே!’ என்று விழித்தான் கார்த்திக்.

“இதைப் பத்தி கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லணும்னு தோணுது.  இப்பக்கூட சில சமயம் நான் உங்களுக்கு ஏதாவது செஞ்சா – பெரிசாக் கூட இல்லை, சுமாரா சமைச்சு வச்சுட்டாக் கூட‌ - நீங்க ஒரு சின்ன குற்ற உணர்ச்சியோடத்தான் ஏத்துக்கறீங்க. உங்க கண்ணுல பார்த்திருக்கேன் நான் அதை. அது எனக்குப் பிடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலை. ஒரு வகையில‌ பிடிச்சிருக்கு, ஒரு வகையில இல்லை. முடிஞ்சா அதைக் குறைச்சுக்கோங்களேன்? நம்ம வாழ்க்கையில நாம ரெண்டு பேர் மட்டும் வாழலாமே.”

ஒரு மௌனம். ஒரு தீர்மானம்.

“அப்ப, கன்னித்தீவு கதையை இப்படி முடிச்சுடலாம்‍-ங்கிறே?”

“முற்றும், சுவாமி!”

(¨`·.·´¨) Always
   `·.¸(¨`·.·´¨) Keep
(¨`·.·´¨ )¸.·´       Smiling..
  `·.¸.·´     
          with love.. Kannan MK

On Seeing The 100% Perfect Girl One Beautiful April Morning

Haruki Murakami has emerged as one of my favourite writers, based on his novels and short stories that I have read this year, and continuing to ‘hunt’ and read. He writes in Japanese, and this a terrfic short story I read in one of his collections of short stories, The Elephant Vanishes. This was originally translated from Japanese into English by Jay Rubin in this collection. I have translated this via English into Tamil. I initially debated whether to ‘adapt’ the story into Tamil, rather than translate it, which will include a change in the setting, location and a few other cultural aspects of the story, but then, I decided to remain truthful to the original and just translate it.
-o0o-
On Seeing The 100% Perfect Girl One Beautiful April Morning
ஓர் அழகிய ஏப்ரல் மாதக் காலைப்பொழுதில், டோக்யோ நகரின் வளமான ஹரஜுக்கு (Harajuku) பகுதியில் அகலம் குறைந்த கிளைத் தெருவொன்றில் நடந்து செல்கையில், நூறு சதவீதம் முழுமையான அந்தப் பெண்ணைக் கடக்க நேர்ந்தது.
உண்மையாக சொல்லப் போனால், அவள் அப்படி ஒன்றும் பெரும் அழகியல்லள். எந்த வகையிலும் அவள் தனித்து நிற்கவில்லை. அவள் அணிந்திருந்த உடைகள், மிக சாதாரணமாய் இருந்தன. தூக்கத்தில் கலைந்த அவள் தலைமுடி, இன்னும் சில இடங்களில் அப்படியே தானிருந்தது. அவளை இளம்பெண் என்று கூட சொல்ல இயலாது, ஒரு முப்பது வயதிருக்கக் கூடும். ஆனாலும், ஐம்பது அடி தூரத்திலேயே என்னால் நன்றாக உணர முடிந்தது - அவளே எனக்கு நூறு சதவீதம் முழுமையான, பொருத்தமான பெண் என்று. அவளைக் கண்ட கணத்தில் என் நெஞ்சத்தில் ஏதோ சலனம், ஒரு பாலைவனத்தைப் போல் என் தொண்டைக்குழி உலர்ந்து வறண்டு போனது.
உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்தமான பெண் வகை இருக்கக் கூடும் – மெலிந்த கணுக்கால் உடைய பெண்கள், அல்லது பெரிய விழிகளை உடையவர்கள், அல்லது நளினமான விரல்களை உடையவர்கள்; அல்லது காரணமேயில்லாமல் பொறுமையாக நேரமெடுத்து சாப்பிடும் பெண்களின் மேல் உங்களுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கக் கூடும். எனக்கும் இந்த விஷயத்தில் சில விருப்பங்கள் உண்டு. சில சமயம் உணவகங்களில் என்னையறியாமல் பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு, அவளது மூக்கின் உருவ அமைப்பு எனக்குப் பிடித்த காரணத்தால்.
ஆனால் யாருமே தனது நூறு சதவீத முழுமையான பெண், ஒரு குறிப்பிட்ட முன்முடிவு செய்யப்பட்ட வகை மாதிரிக்குள் அடங்கி விடுவாள் என்று சொல்ல முடியாது. எனக்கு மூக்குகளை மிகவும் பிடிக்கும் என்றாலும், அந்தப் பெண்ணின் மூக்கு எப்படி இருந்தது என்று என்னால் நினைவுபடுத்திச் சொல்ல முடியவில்லை, அவளுக்கு மூக்கு ஒன்று இருந்ததா என்று கூட நினைவில்லை. எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அவள் பெரும் அழகி அல்ல என்பது மட்டுமே. வினோதம் தான்.
“நேத்து நூறு சதவீதம் முழுமையான பொண்ணு ஒருத்திய‌ ரோட்ல‌ பார்த்தேன்” என்று யாரிடமோ சொன்னேன்.
“ஓ!?” என்றான் அவன். “அழகா இருந்தாளோ?”
“அப்படின்னு சொல்ல முடியாது.”
“அல்லது உனக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணா?”
“எனக்கு சொல்லத் தெரியலை. அவளைப் பத்தி ஒண்ணும் பெரிசா ஞாபகம் இல்லை - கண்ணு எப்படி இருந்தது, முகம், எதுவும் ஞாபகம் இல்லை.”
“விசித்திரமா இருக்கே!”
“ஆமா, விசித்திரம் தான்.”
அவன் அக்கறையிழந்து, “எப்படியோ, அப்புறம் என்ன பண்ணே? அவ கிட்டெ பேசினியா? பின்னாடியே போனியா?” என்றான்.
“இல்லை, தெருவில க்ராஸ் பண்ணிக்கிட்டோம். அவ்ளோ தான்.”
அவள் கிழக்கிலிருந்து மேற்குப்புறமாக நடந்து கொண்டிருந்தாள். நான் எதிர்ப்புறமாக. ஓர் இதமான ஏப்ரல் மாதக் காலைப் பொழுது.
அவளிடம் பேசியிருக்க வேண்டும். ஒரு அரை மணி நேரம் போதும் – மிகத் தாராளமாய் இருக்கும். அவளைப் பற்றிக் கேட்டறிய‌, என்னைப் பற்றி அவளிடம் சொல்ல, அதை விட முக்கியமாய் நான் அவளுக்கு சொல்ல விரும்புவது – 1981ல் ஓர் அழகிய ஏப்ரல் மாதக் காலையில் என்னையும் அவளையும் ஹரஜுக்குவின் அந்தக் கிளைத் தெருவில் ஒருவரையொருவர் கடக்க வைத்த விதியின் திருவிளையாடலைப் பற்றித்தான்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு எங்காவது மதிய உணவருந்தச் சென்றிருப்போம். அப்புறம் ஒரு வுடி ஆலன் திரைப்படம் பார்த்துவிட்டு, ஏதேனும் ஒரு ஹோட்டல் பாரில் காக்டெயில் அருந்த நுழைந்திருப்போம். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், இரவு படுக்கையில் சங்கமித்திருப்போம்.
சந்தர்ப்பம் என் இதயக் கதவைத் தட்டியதோ?
எங்களுக்கிடையில் பதினைந்து அடிகளே தூரமாய் இருந்த சமயம் எப்படி அவளை நெருங்கியிருக்க வேண்டும்? என்ன சொல்லியிருக்க வேண்டும்?
“ஹலோ, குட் மார்னிங், ஒரு அரை மணி நேரம் எனக்காக ஒதுக்கி நான் சொல்றதைக் கேட்க முடியுமா?”
சேச்சே! பைத்தியக்க்காரத்தனம்! இன்ஷூரன்ஸ் விற்க வந்தவன் மாதிரி இருந்திருக்கும்!
“மன்னிச்சுக்கோங்க, இந்த ஏரியாவில‌ துணி துவைச்சுத் தர்ற‌ லாண்ட்ரி சர்வீஸ் கடை ஏதாவது இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?”
ம்ஹூம்! அதே அளவு பைத்தியக்காரத்தனம் தான் இதுவும். என்னிடம் கையில் பழைய துணி எதுவும் இல்லை. அதுவுமில்லாமல், இப்படிக் கேட்பதை யார் தான் நம்புவார்கள்?
ஒருவேளை, உண்மையை சொல்லிவிடலாமா? “குட்மார்னிங்! நீங்க தான் எனக்குப் பொருத்தமான நூறு சத‌வீதம் முழுமையான பொண்ணு.”
இல்லை, அவள் நம்ப மாட்டாள். அப்படியே நம்பினாலும், என்னிடம் பேச விருப்பமில்லாமல் போகலாம். ‘ஸாரி, நான் உங்களுக்குப் பொருத்தமான‌ நூறு சதவீதம் முழுமையான பொண்ணாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எனக்குப் பொருத்தமான நூறு சதவீதம் முழுமையான பையன் இல்லை’ என்று சொல்லிவிடக்கூடும். அப்படி நடக்கவும் வாய்ப்புகள் உண்டு. அப்படி ஒரு நிலைமை மட்டும் எனக்கு ஏற்பட்டால் நான் நொறுங்கிப் போய்விடுவேன். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீளவே முடியாது. முப்பத்திரெண்டு வயதாகி விட்டது எனக்கு. மூப்படைவது என்பது வேறொன்றுமில்லை, இதுதான்.
ஒரு பூக்கடையின் முன்னால் நாங்கள் ஒருவரையொருவர் கடக்கிறோம். ஒரு சிறிய அளவிலான‌, மித வெப்பக் காற்று என் மேனியைத் தழுவுகிறது. சாலையின் தார் சற்று ஈரமாக இருக்கிறது. ரோஜாப்பூக்களின் வாசத்தை உணர்கிறேன். அவளிடம் பேச, எவ்வளவு முயன்றும் என்னால் முடிவதில்லை. அவள் வெள்ளை நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருக்கிறாள். வலது கையில் ஸ்டாம்ப் ஒட்டப்படாத ஒரு கடித உறை. யாருக்கோ கடிதம் எழுதியிருக்கிறாள். அவள் கண்களில் இன்னும் கலையாத தூக்கத்தை வைத்து ஊகித்தால் இரவு முழுவதும் அந்தக் கடிதத்தை எழுதுவதில் கழித்திருக்கிறாள். அவள் இதுவரை அறிந்த அத்தனை இரகசியங்களையும் அந்தக் கடித உறை சுமந்து செல்கிறது போலும்.
நான் சில அடிகள் எடுத்து வைத்துப் பிறகு திரும்பிப் பார்க்கிறேன். அவள் கூட்டத்தில் கரைந்து மறைந்து தொலைந்து போனாள்.
-o0o-
அவளிடம் நான் என்ன சொல்லியிருக்க வேண்டும் என்று இப்போது நான் தெளிவாக அறிகிறேன். ஒரு நீண்ட உரையாக அது இருந்திருக்கும். நான் சரியாகச் சொல்லியிருக்க முடியுமா என்று என்னை நானே சந்தேகிக்கும் அளவுக்கு நீளமானது. எப்போதுமே எனக்கு உதிக்கும் யோசனைகள் அவ்வளவு சாத்தியமானவையாக இருப்பதில்லை.
“ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு ஊரில்” என்று அந்த உரை துவங்கியிருக்கும். “ஒரு துக்ககரமான கதை, அல்லவா?” என்று முடிந்திருக்கும்.
ரொம்ப காலத்துக்கு முன்னால் ஒரு ஊரில் ஒரு பையனும் ஒரு பொண்ணும் வாழ்ந்தார்கள். பையனுக்கு பதினெட்டு வயது. பொண்ணுக்கு பதினாறு. அவன் ரொம்ப அழகானவன் இல்லை, அவளும் தான். சுமாரான பையன், பரவாயில்லை என்பது போல‌ பொண்ணு. மற்ற‌ எல்லோரையும் போல. ஆனால் அவர்கள் இருவரும் மனதுக்குள் தீவிரமாக நம்பியது என்னவென்றால், இந்த உலகத்தில் எங்கேயோ தனக்குப் பொருத்தமான நூறு சதவீதம் முழுமையான பொண்ணும் பையனும் வாழ்கிறார்கள் என்று. ஆம், அப்படி ஒரு அற்புதம் நிகழும் என்று அவர்கள் நம்பினார்கள். ஒரு நாள் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
அவர்கள் இருவரும் ஒரு தெருமுனையில் எதிரெதிரே வந்து சந்தித்துக் கொண்டார்கள்..
அவன் சொன்னான்: “அடேயப்பா! என்ன ஆச்சர்யம்?! நான் என் வாழ்க்கை பூரா உன்னைத்தான் தேடியலைஞ்சுக்கிட்டிருக்கேன். நீ நம்புவியோ மாட்டியோ, ஆனா நீ தான் எனக்குப் பொருத்தமான முழுமையான பொண்ணு.”
அவள் சொன்னாள்: “நீயும் தான் எனக்குப் பொருத்தமான முழுமையான பையன். நான் எப்படியெல்லாம் கற்பனை செஞ்சு வச்சிருந்தேனோ, அப்படி. எல்லா விஷயத்துலயும். ஒரு கனவு மாதிரி இருக்கு.”
அவர்கள் இருவரும் ஒரு பூங்காவின் இருக்கைகளில் அருகருகே அமர்ந்தார்கள். ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டார்கள். தங்களைப் பற்றிய கதைகளை, விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். எத்தனையோ மணி நேரங்கள் க‌டந்தன. பேசிக் கொண்டேயிருந்தார்கள். இனிமேல் அவர்கள் தனித்து உணரப் போவதில்லை. அவர்கள் தங்கள் முழுமையான மறுபாதிகளைக் கண்டடைந்து விட்டார்கள், முழுமையான மறுபாதிகளால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்கள். இது எப்படிப்பட்ட அருமையான ஒன்று! ஒரு அற்புதம், ஒரு பிரபஞ்ச அற்புதமன்றி வேறென்ன?
அவர்கள் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டேயிருந்த போது, மனதின் ஆழத்தில் ஒரு சிறிய சந்தேகம் துளிர்விட்டது: ஒரு கனவு இப்படி எளிமையாக நிறைவேறிவிடுவதை நம்பலாமா, இது நன்மையானது தானா?
அவர்களது உரையாடலில் ஒரு தயக்கமான இடைவெளி விழுந்தது. அந்தப் பையன் அவளிடம் “நாம ஒரு சின்ன சோதனை செஞ்சு பார்ப்போம், ஒரே ஒரு தடவை தான். நாம நிஜமாவே ஒருத்தருக்கொருத்தர் முழுமையான, பொருத்தமான துணைகளா இருந்தா, இன்னொரு தடவை எங்கயாவது, எப்பயாவது சந்திப்போம். கண்டிப்பா பார்த்துப்போம். அப்படி பார்த்துக்கறப்போ, நிஜமாவே நாம ஒருத்தருக்கொருத்தர் முழுமையான பொருத்தமான ஆள் தான்னு புரிஞ்சுப்போம். அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம், சரியா?” என்று சொன்னான்.
“ரொம்ப சரியா சொன்னே. அப்படியே செய்யலாம்” என்று அவளும் ஒப்புக் கொண்டாள்.
அப்படியாக அவர்கள் பிரிந்து சென்றார்கள். அவள் கிழக்குப் புறமாக, அவன் மேற்குத் திசையில்.
அவர்கள் செய்து பார்க்கத் திட்டமிட்ட அந்த சோதனை, உண்மையில் தேவையில்லாத ஒன்று. அவர்கள் அதைச் செய்திருக்கக் கூடாது, ஏனென்றால் அவர்கள் இருவரும் தான் மற்றொருவரின் முழுமையான பொருத்தமான துணைகள். அவர்கள் ஒரு முறை சந்தித்ததே ஒரு பெரும் அற்புத நிகழ்வு. ஆனால் பாவம், அவர்கள் அதை அப்போது அறிந்திருக்கவில்லை. இளம் வயதல்லவா? விதியின் இரக்கமற்ற அலைகள், அவர்களை வெவ்வேறு திசைகளில் சுழற்றியெறிந்தன.
ஒரு குளிர்பருவத்தில் அந்தப் பையனும் பெண்ணும் கொடுமையான குளிர்ஜுரத்தால் பீடிக்கப்பட்டனர். வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் பல நாட்கள் ஊசலாடிப் பிழைத்தனர். அந்தோ பரிதாபம், இது வரை வாழ்ந்த வருடங்களின் நினைவுகளை முற்றிலுமாக இழந்தனர். அவர்கள் விழித்தெழுந்த போது எழுத்தாளர் டி.ஹெச்.லாரன்ஸ் சிறுவயதில் பயன்படுத்திய உண்டியல் போல அவர்களது நினைவுகள் காலியாக இருந்தன.**
ஆனால் அவர்கள் இருவரும் மன உறுதியும் அறிவாற்றலும் நிறைந்தவர்களாய் இருந்ததினால், இந்தச் சமூகத்தில் பங்காற்றக் கூடிய உறுப்பினர்களாய் மீண்டும் சில காலத்தில் திரும்பினார்கள். அதற்குத் தேவையான அனைத்துத் திறமைகளையும் கடுமையான இடைவிடாத முயற்சியினால் அடைந்தார்கள். கடவுளுக்கு நன்றி, அவர்கள் இருவரும் மிக விரைவிலேயே சமூகத்தின் தலை சிறந்த குடிமக்களாய் ஆனார்கள். எந்த பாதாள இரயில் நிலையத்தில் எந்த இரயிலைப் பிடித்தால் எங்கே செல்லலாம் என்பது போன்ற முக்கியமான விஷயங்களை மீண்டும் அறிந்து கொண்டார்கள். அஞ்சலகத்தில் ஸ்பெஷல் டெலிவரி தபால்களை எப்படி அனுப்புவது என்பதெல்லாமும். மீண்டும் காதலை உணந்தார்கள், ஒரு 75 சதவீதம் அல்லது 85 சதவீதம் என்று கூடச் சொல்லலாம்.
காலம் மிக விரைவாய்க் கடந்து சென்றது. இப்போது அந்தப் பையனுக்கு முப்பத்திரெண்டு வயது. அவளுக்கு முப்பது.
ஓர் அழகிய ஏப்ரல் மாதல் காலையில், அந்த நாளைத் தொடங்கி வைக்க‌ ஒரு காப்பியை நாடி அந்தப் பையன் நடந்து கொண்டிருந்தான். மேற்கிலிருந்து கிழக்குத் திசையில். அப்போது அந்தப் பெண் ஒரு கடிதத்தை ஸ்பெஷல் டெலிவரியாக அனுப்ப உத்தேசித்து கிழக்கிலிருந்து மேற்குப்புறமாக நடந்து வந்தாள். இருவரும் ஹரஜுக்கு பகுதியின் ஒரு குறுகிய கிளைத் தெருவில் நடந்து கொண்டிருந்தனர். தெருவின் மத்தியில் அவர்கள் ஒருவரையொருவர் கடந்தனர். தொலைந்த நினைவுகளின் வெளிறிய ஒளிக்கீற்று, அவர்களின் இதயங்களில் ஒரு கண நேரம் தோன்றி மறைந்தது. அவர்களுக்குத் தெரியும்:
அவள் தான் எனக்குப் பொருத்தமான முழுமையான பெண்.
அவன் தான் எனக்குப் பொருத்தமான முழுமையான பையன்.
ஆனால் அந்த நினைவுகளின் வெளிச்சம் மிக பலவீனமாக இருந்தது. அவர்களின் சிந்தனையில் பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய தெளிவு இருக்கவில்லை. ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் அவர்கள் கடந்து சென்றார்கள். கூட்டத்தில் மறைந்து விட்டார்கள். என்றென்றைக்குமாக.
ஒரு துக்ககரமான கதை, அல்லவா?
ஆம், இது தான். இதைத் தான் நான் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும்.
-o0o-
Notes:
** “When they awoke, their heads where as empty as young D.H.Lawrence’s piggy bank” என்று ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கிறது. இதைப்பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தேன். எழுத்தாளர் டி.ஹெச்.லாரன்ஸ், அவரது சிறு வயதில் மிகுந்த ஏழ்மையில் இருந்தார் என்ற குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு உவமையாக இது இருக்கக் கூடும். வேறு எந்த உள்கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை. 
உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால், comments  குடுக்கவும். 
(¨`·.·´¨) Always
   `·.¸(¨`·.·´¨) Keep
(¨`·.·´¨ )¸.·´       Smiling..
  `·.¸.·´       
          with love.. Kannan MK
 

HTML/JAVASCRIPT BLOG

You can find the help for html and javascript codes

Any Doubts Contact my Mail-ID:
kannan.mkv@gmail.com